வியாழன், 30 ஜூலை, 2015

மக்கள் ஜனாதிபதி, பாரத ரத்னா, டாக்டர் A.P.J.அப்துல் கலாம்
முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அவர்கள்-க்கு புகழ் அஞ்சலி!
 
பறவையாய் பறக்க ஆசைப்பட்டவர், S.L.V. விண்கலம் மூலம் விண்ணில் ரோகிணி செயற்கைக்கோளை மிதக்கவிட்டவர்.

ஏவுகணை மனிதன். "Missile Man”
தான் பள்ளிக்கூட சிறுவனாக இருக்கும் போது ராமேஸ்வரம் கடற்கரையில் பறவைகள் பறக்கும் அழகை ரசித்தவர். ‘‘அவர் சொல்லுவார்.... பறவைகள் எவ்வளவு அழகாக பறக்கிறன.  தன் சிறகுகளை விரித்தபடியே...கடற்கரையில் தன் இலக்கில் வந்து அமர்கின்றன. அப்படியே மேல் எழும்புகின்றன.’’
எப்படி என்ற கேள்வி ஆரம்ப பள்ளி மாணவனாக இருக்கும் போதே மனசில் ஆழப்பதிந்து விட்டதாகவும், அவைகள் எப்படி பறக்கின்றன என்று தன் ஆசிரியரிடம்   கேள்வி கேட்டு அறிந்ததாகவும், தானும் அதுபோல் பறக்க ஆசை பட்டதாகவும் தன்னுடைய சிறுவயது கனவை நினைவு படுத்துகிறார்.
அந்த கனவு....எண்ணம்.....ஒரு குறிக்கோளாக, அவருள் லட்சியமாக வளர,
அந்த அறிவை தேடி, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இயற்யியலில் இளங்கலை(1954), சென்னை எம்.ஐ.டி.யில் வானூர்தி பொறியியல் உயர் படிப்பு(1957).
மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் சிந்தனை துளிகள்
*கனவு என்பது உன் தூக்கத்தில் காண்பதல்ல! உன்னை தூங்க விடாமல் செய்வதே (லட்சிய) கனவு!!


பறவையாய் பறக்க விரும்பியவர் , விமானியாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆகவே விமானப்படை விமானிக்கு நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்ட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எட்டு பேர் மட்டும் தேர்வு செய்யப்பட, இவருக்கு ஒன்பதாம் இடம் தான் கிடைத்த்து. வாய்ப்பு இழந்த நிலையில், தான் ஹரித்துவார் சென்றதாகவும், அங்கு மனதில் ஒரு தெளிவு பிறந்தது என்றும் அதன் பின் அவர், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு தறையில்(1960) பணியில் சேர்ந்ததாகவும கூறுகிறார்.


மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் சிந்தனை துளிகள்
*கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்! கஷ்டத்தை வென்று விடலாம்
மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் சிந்தனை துளிகள்
 *அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால்...அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்புகள் உள்ளன.

முதலில் இந்திய ராணுவ பயன்பாட்டிற்கு சிறிய ரக ஹெலிகாப்டர் வடிவமைத்தல், 1969 –ம் ஆண்டு இஸ்ரோ வின் எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள், தொடர்ந்து
1980-ல் எஸ்.எல்.வி.3 ராக்கெட் மூலம் ரோகினி-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவியதில் அப்துல்கலாம் அவர்களின் சிறப்பான பங்களிப்பு.




1970 முதல் 1990 வரை இஸ்ரோ விண்வெளி திட்டங்களின் எஸ்.எல்.வி. மற்றும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவி, உலக நாடுகளும் வல்லரசுகளும் நம் இந்தியாவை அண்ணாந்து பார்க்க செய்த பெருமைக்கு  அப்துல்கலாம் அவர்களின் மிக முக்கிய பங்களிப்பு.      

அவர் அடிக்கடி கூறும் ஒரு திருக்குறள்......
''இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.'' குறள் 623  
துன்பம் (தோல்வி) வரும்போது, மனம் கலங்காதவர், அந்த துன்பத்திற்கு (தோல்விக்கு)  துன்பம் (தோல்வி)  விளைவித்து அதை வென்றுவிடுவார்கள்.

மேலும் வல்லரசுகளுக்கு இணையாக இந்தியா ராணுவத்தில் அதி நவீன தொழில்நுட்பத்தில், உள்நாட்டு தயாரிப்பான, நீண்ட தொலைவு சென்று தாக்கும் உலகில் சிறந்த அக்னி, பிருத்வி, ஆகாஷ் போன்ற ஏவுகணைகளை தயாரிப்பதில் ஒரு முன்னோடி விஞ்ஞானி அப்துல்கலாம் அவர்களின் மிக முக்கிய பங்களிப்பு.

எல்லாவற்றிற்கும் சிகரமாய் 1999-ல் பொக்ரான் அணு-ஆயுத சோதனையை, அமெரிக்காவின் உளவு செயற்கைகோள் கண்ணில் படாமல் வெற்றிகரமாக செயல் படுத்தியதில் அப்துல்கலாம் அவர்களின் மிக முக்கிய பங்களிப்பு.

இது போன்ற பல்வேறு சாதனைகளை படைத்த, இந்தியாவின கடைகோடியில் ஒரு கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்து, சிறுவயதில் வறுமையில் பள்ளிகூடம் போவதற்கு முன் தினசரி பேப்பர்களை வினியோகம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வீட்டு செலவுக்கு கொடுத்து, ஏழ்மைநிலையில் படித்தவர் அப்துல்கலாம் அவர்கள்.

1981-ல் பத்ம பூஷண் விருது,
1990-ல் பத்ம விபூஷண் விருது,
1997-ல் இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா 
இந்த விருதுகள் அரசியல் காரணங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல.
அவரது அறிவுசார் சிந்தனை, செயல்கள், விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றிற்காக இந்திய அரசு அவரை கௌரவித்தது இது ஒவ்வொரு இந்திய குடிமகனும் பெருமை கொள்ளும் விசயம்.

எல்லாவற்றிற்கும் மணி மகுடம் சூட்டுவது போல் 2002-ல் அவர் அனைத்து அரசியல் கட்சிகளின் முழு ஆதரவோடு மிக பெரும்பான்மை வாக்கு பெற்று இந்திய குடியரசு தலைவரானார்(2002-2007)..  ”People President” ''மக்கள் ஜனாதிபதி'' அப்துல்கலாம் என்ற புகழ் மொழி அவரை தேடி வந்தது.


இந்த புகழ் மொழியை புகழ்மாலையை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவர்கள், இன்று தனது அஞ்சலி செய்தியில்,. ”People President” அப்துல் கலாம் என்று நினைவு கூறுகிறார். 

இந்த புகழ்மாலை, இந்தியா 2020-யில் ஒரு வல்லரசு ஆகும். கனவு காணுங்கள், உங்கள் கனவு செயல் வடிவம் பெறும் என்று உயிர் மூச்சு பிரியும் வரை நம் மாணவர்களை ஊக்கப்படுத்திக்கொண்டிருந்த அந்த உத்தமனுக்கு உலக வல்லரசு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவர்கள் புகழ்மாலை சூடுகிறார். 

பாரத ரத்னா, டாக்டர் A.P.J.அப்துல் கலாம் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அவர்கள் மீது சூட்டப்பட்ட இந்த புகழ்மாலை வாடிப்போகும் பூமாழை அல்ல. அவரோடு அணிகலன் ஆகிவிட்ட மணிமாலை! முத்துமாலை!! பவளமாலை!!!

மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் சிந்தனை துளிகள்
*பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால்..........
இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
  
  


மக்கள் ஜனாதிபதி, பாரத ரத்னா, டாக்டர் A.P.J.அப்துல் கலாம்
முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அவர்கள் 

செவ்வாய், 28 ஜூலை, 2015

கலாம் ஒரு காலம்!...ஆமாம், சரித்திர பக்கங்களில்....ஆழப்பத்தியபட்டவர்!

மக்கள் ஜனாதிபதி, பாரத ரத்னா, டாக்டர் A.P.J.அப்துல் கலாம்
முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அவர்கள்
27-07-2015 திங்கட்கிழமை இரவு 7.45 மணியளவில் காலமானார்.
கலாம் ஒரு காலம்!........ ஆமாம், சரித்திர பக்கங்களில்...ஆழப்பத்தியப்பட்டவர்.
மேலும் ஒரு கலம்.....விண்கலம்!! விண்ணில் மிதந்து கொண்டிருக்கிறார்.
கலாம் ஒரு எழுது கோல்!!!  அவர் சிந்தனையில் உதித்த, அறிவுசார் விசயங்களை அழியா மையால் இந்திய மாணவர்களின் இதயத்தில் எழுதியவர்.    


புதன், 22 ஜூலை, 2015

TAMIL SUPER HIT OLD TAMIL SONGS - SAD SONGS OF SHIVAJI GANESHAN - UN KAA...

Vietnam Veedu | Un Kannil Neer song

உன் கண்ணில் நீர் வழிந்தால்...... என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி..... 

  அருமையான பாடல்!   அற்புதமான நடிப்பு!!    வாழ்வின் யதார்த்தம்!!!

வியட்நாம் வீடு1970 களில் வந்த சிறந்த திரைப்படம்.
காதலும் பாசமும் மிக்க கணவன் மனைவி
பொருத்தமான ஜோடி சிவாஜி கணேசன்-பத்மினி,  
நடிப்பில் ஜீவனை தந்தவர்கள்! 

வயதான பெற்றோர், பெற்ற பிள்ளைகளால் படும் துயரத்தை அப்படியே அசலாய்.....

பிள்ளைகளின் செயல்களால், மனம் வேதனை படும்போது, கணவன்-மனைவியின் அரவணைப்பும் ஆறுதலும் எந்த அளவுக்கு மனதுக்கு ஒத்தடம் கொடுக்கும் என்பதற்கும்,

எனக்கு நீ! உனக்கு நான்! சாகும் வரை தொடரும் என்ற உன்னத உறவின் உயிர் துடிப்பை, இயல்பான தங்கள் நடிப்பால் நம்மையும் சேர்த்து ஆழ வைத்து விட்டார்கள். 

நடிகர் திலகம் அவர்களுக்கு இத்திரைபடம் ஒரு மைல்கல் ஆக இருந்த்து.          
வாழ்க்கையின் அர்த்தங்களை மிக ஆழமாய் சொல்லும் கண்ணதாசன் வரிகள்.........மனைவியை...... மிக ஆழயாய்...நேசிக்க சொல்கிறது!

கவிஞர் கண்ணதாசனின் அனுபமிக்க, யதார்த்த வரிகளினால்.........
கணவன் மனைவி உறவு என்பது எவ்வளவு காதலும், பாசமும் மிக்கது என்பதையும், ஒருவருக்கு ஒருவர் தரும் ஆறுதல்கள், அவர்களின்  துயர் துடைக்க... வேதனையின் வெப்பத்தை.....மனம் சுமக்க முடியாத சுமைகளை இறக்கி வைக்க...என்று கணவன்-மனைவி உறவை எவ்வளவு ஆழமாய் சிந்தித்து எழுதிய கல்வெட்டு வார்த்தைகள் இவைகள்.

என் கண்ணின் பாவை அன்றோ கண்ணம்மா, என்னுயிர் நின்னதன்றோ
உன் கண்ணில் நீர் வழிந்தால்...... என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி..... 
......மார்பில் என்னை தாங்கி...வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் விம்மல் தணியுமடி. 

ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன?  
வேர் என நீ இருந்தாய் அதில் (அதனால்) வீழ்ந்து விடாதிருந்தேன்.

உன்னை கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி!
பொண்ணை மணந்ததனால்.... சபையில் புகழும் வளர்ந்ததடி!

பாடல்கள் வெறும், கேட்டு ரசிக்க மட்டுமல்ல.......
அவைகளை கேட்டு சிந்திக்கவும் செய்ய......!

புதன், 15 ஜூலை, 2015

M.S.விஸ்வநாதன் சங்கீதமாய்...மெல்லிசையாய்...மௌனராகமாய்...வாழ்கிறார்!



M.S.விஸ்வநாதன் அவர்கள் வாழ்கிறார்.............
சங்கீதமாய்....மெல்லிசையாய்....மௌனராகமாய்....வாழ்கிறார்!      
எம்எஸ்வி அவர்கள் இறக்கவில்லை.........அவர் இசைத்து... காற்றில் கலந்துவிட்ட அந்த சங்கீத ஸ்வரங்களுக்குள் நுழைந்து ஐக்கியமாகி, நம் கண்ணுக்கு தெரியாமல் வாழ்கிறார்.

காற்றில் சங்கீதமாகிவிட்ட அவரது ஜீவன்.....அந்த நாதம் விஸ்வநாதம் இந்த பிரபஞ்சம் உள்ளவும் நம் மனதை வருடும், தாலாட்டும், தூங்க வைக்கும். அவர் மெல்லிசை மன்னர் என்பதைவிட மெல்லிசை நாதம் (விஸ்வநாதம்) என்பது பொருந்தும்.

மெல்லிசை மன்னர் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்  காலமானார் இன்று 14-07-2015 அதிகாலையில் காலமானார்.
தமிழ் திரையுலகில் 60 ஆண்டு காலம், இரட்டையர்கள், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமூர்த்தி என்று அறியப்பட்டவர்களில் ஒருவரான மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள், ஒரு இசை சகாப்தம் ஆவார்.

இரவின் மடியில்....தாலாட்டும் அவரது மெல்லிசைப்பாடல்கள் என்றும் சாகாவரம் பெற்றவைகள். காலத்தை வென்ற காவியங்கள்.
கண்ணதாசன், வாலி போன்ற கவிஞர்களின் கவிதை வரிவடிவங்களை இசை என்ற ஒலிவடிவங்களில் புகுத்தி, எம்எஸ்வியால் பிரசவிக்கப்பட்ட மெல்லிசைப்பாடல்கள், வீடு, வீதி, நாடு முழுவதும் காற்றில் மிதந்து ஒலித்துக்கொண்டிருகின்றன.

M.S.விஸ்வநாதன் அவர்கள் தமிழ் திரையுலகிற்கு ஒரு புதிய சகாப்தம் மட்டுமல்ல, இன்றைய தமிழ் திரையுலக இசை அமைப்பாளரகளின், புதிய பரிணாமத்தின் வழி தோன்றல் ஆக இருந்தவர் எம்எஸ்வி என்பது சரித்திர பதிவு.

தமிழ் திரை ஜாம்பவான்கள் எம்ஜியார், சிவாஜி, எஸ்எஸ்ஆர், ஜெமினி, முத்துராமன், நாகேஷ், ஜெயசங்கர், ரவிசந்திரன், திரை தாரகைகள் பத்மினி, பானுமதி, சாவித்திரி, சவுகார் ஜானகி, மனோரமா, தேவிகா,சரோஜாதேவி, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, காஞ்சனா,  போன்ற மூத்த தலைமுறை கலைஞர்கள், புகழ் பெற்ற இயக்குனர்கள், கவிஞர்கள் கண்ணதாசன், வாலி போன்ற பாடலாசிரியர்கள், பின்ன்னி பாடகர்கள், இசைகலைஞர்கள் ஆகியோர்களுடன் பணியாற்றிய பெருமைக்கு உரியவர். எளிமையானவர். வாழ்க்கையில் மிக அடிமட்டத்திலிருந்து மேலே வந்த ஒரு உன்னதமான உழைப்பாளி.


புகழ் பெற்ற இந்தி(ய)திரை இசையமைப்பாளர்களான, நவுசாத்,
ஆர்.டி பர்மன், சங்கர் ஜெய்கிஷான், லட்சுமிகாந்த் பியாரிலால் போன்றவர்களின் வரிசையில், தென்னிந்திய மொழிகளில், தமிழில், இந்தி திரையிசைக்கு இணையான இசையை எல்லா வாத்திய கருவிகளையும் பயன் படுத்தி, மேற்கத்திய-கர்நாடக இசையை ஒருங்கிணைத்து (இன்றைய வளர்ந்த தொழில் நுட்பம் இல்லாத காலத்தில்) ஒரு பிரமாண்ட இசையை படைத்தவர், மிகச்சிறந்த இசையமைப்பாளர்.

அவர் இசையமைத்த மெல்லிசைப்பாடல்கள்.... அவரின் மெல்லிசைகள், நம் எல்லோர் காதுகளிலும் இசைத்துக்கொண்டிருக்கும். எல்லாத்தலைமுறையினரும் கேட்டு இன்புறும் இசையமுதம். ஜீவநாதம். அவைகள் தூங்கியவனை தட்டி எழுப்பும். தூங்க இருப்பவனை தடவிக்கொடுத்து, தாலாட்டி தூங்க வைக்கும்.

M.S.விஸ்வநாதன் அவர்கள் வாழ்கிறார்.............
சங்கீதமாய்....மெல்லிசையாய்....மௌனராகமாய்....வாழ்கிறார்!                                      -பிரேம்நசீர். 14-07-2015.