புதன், 15 ஜூலை, 2015

M.S.விஸ்வநாதன் சங்கீதமாய்...மெல்லிசையாய்...மௌனராகமாய்...வாழ்கிறார்!



M.S.விஸ்வநாதன் அவர்கள் வாழ்கிறார்.............
சங்கீதமாய்....மெல்லிசையாய்....மௌனராகமாய்....வாழ்கிறார்!      
எம்எஸ்வி அவர்கள் இறக்கவில்லை.........அவர் இசைத்து... காற்றில் கலந்துவிட்ட அந்த சங்கீத ஸ்வரங்களுக்குள் நுழைந்து ஐக்கியமாகி, நம் கண்ணுக்கு தெரியாமல் வாழ்கிறார்.

காற்றில் சங்கீதமாகிவிட்ட அவரது ஜீவன்.....அந்த நாதம் விஸ்வநாதம் இந்த பிரபஞ்சம் உள்ளவும் நம் மனதை வருடும், தாலாட்டும், தூங்க வைக்கும். அவர் மெல்லிசை மன்னர் என்பதைவிட மெல்லிசை நாதம் (விஸ்வநாதம்) என்பது பொருந்தும்.

மெல்லிசை மன்னர் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்  காலமானார் இன்று 14-07-2015 அதிகாலையில் காலமானார்.
தமிழ் திரையுலகில் 60 ஆண்டு காலம், இரட்டையர்கள், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமூர்த்தி என்று அறியப்பட்டவர்களில் ஒருவரான மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள், ஒரு இசை சகாப்தம் ஆவார்.

இரவின் மடியில்....தாலாட்டும் அவரது மெல்லிசைப்பாடல்கள் என்றும் சாகாவரம் பெற்றவைகள். காலத்தை வென்ற காவியங்கள்.
கண்ணதாசன், வாலி போன்ற கவிஞர்களின் கவிதை வரிவடிவங்களை இசை என்ற ஒலிவடிவங்களில் புகுத்தி, எம்எஸ்வியால் பிரசவிக்கப்பட்ட மெல்லிசைப்பாடல்கள், வீடு, வீதி, நாடு முழுவதும் காற்றில் மிதந்து ஒலித்துக்கொண்டிருகின்றன.

M.S.விஸ்வநாதன் அவர்கள் தமிழ் திரையுலகிற்கு ஒரு புதிய சகாப்தம் மட்டுமல்ல, இன்றைய தமிழ் திரையுலக இசை அமைப்பாளரகளின், புதிய பரிணாமத்தின் வழி தோன்றல் ஆக இருந்தவர் எம்எஸ்வி என்பது சரித்திர பதிவு.

தமிழ் திரை ஜாம்பவான்கள் எம்ஜியார், சிவாஜி, எஸ்எஸ்ஆர், ஜெமினி, முத்துராமன், நாகேஷ், ஜெயசங்கர், ரவிசந்திரன், திரை தாரகைகள் பத்மினி, பானுமதி, சாவித்திரி, சவுகார் ஜானகி, மனோரமா, தேவிகா,சரோஜாதேவி, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, காஞ்சனா,  போன்ற மூத்த தலைமுறை கலைஞர்கள், புகழ் பெற்ற இயக்குனர்கள், கவிஞர்கள் கண்ணதாசன், வாலி போன்ற பாடலாசிரியர்கள், பின்ன்னி பாடகர்கள், இசைகலைஞர்கள் ஆகியோர்களுடன் பணியாற்றிய பெருமைக்கு உரியவர். எளிமையானவர். வாழ்க்கையில் மிக அடிமட்டத்திலிருந்து மேலே வந்த ஒரு உன்னதமான உழைப்பாளி.


புகழ் பெற்ற இந்தி(ய)திரை இசையமைப்பாளர்களான, நவுசாத்,
ஆர்.டி பர்மன், சங்கர் ஜெய்கிஷான், லட்சுமிகாந்த் பியாரிலால் போன்றவர்களின் வரிசையில், தென்னிந்திய மொழிகளில், தமிழில், இந்தி திரையிசைக்கு இணையான இசையை எல்லா வாத்திய கருவிகளையும் பயன் படுத்தி, மேற்கத்திய-கர்நாடக இசையை ஒருங்கிணைத்து (இன்றைய வளர்ந்த தொழில் நுட்பம் இல்லாத காலத்தில்) ஒரு பிரமாண்ட இசையை படைத்தவர், மிகச்சிறந்த இசையமைப்பாளர்.

அவர் இசையமைத்த மெல்லிசைப்பாடல்கள்.... அவரின் மெல்லிசைகள், நம் எல்லோர் காதுகளிலும் இசைத்துக்கொண்டிருக்கும். எல்லாத்தலைமுறையினரும் கேட்டு இன்புறும் இசையமுதம். ஜீவநாதம். அவைகள் தூங்கியவனை தட்டி எழுப்பும். தூங்க இருப்பவனை தடவிக்கொடுத்து, தாலாட்டி தூங்க வைக்கும்.

M.S.விஸ்வநாதன் அவர்கள் வாழ்கிறார்.............
சங்கீதமாய்....மெல்லிசையாய்....மௌனராகமாய்....வாழ்கிறார்!                                      -பிரேம்நசீர். 14-07-2015.

கருத்துகள் இல்லை: