வியாழன், 30 ஜூலை, 2015

மக்கள் ஜனாதிபதி, பாரத ரத்னா, டாக்டர் A.P.J.அப்துல் கலாம்
முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அவர்கள்-க்கு புகழ் அஞ்சலி!
 
பறவையாய் பறக்க ஆசைப்பட்டவர், S.L.V. விண்கலம் மூலம் விண்ணில் ரோகிணி செயற்கைக்கோளை மிதக்கவிட்டவர்.

ஏவுகணை மனிதன். "Missile Man”
தான் பள்ளிக்கூட சிறுவனாக இருக்கும் போது ராமேஸ்வரம் கடற்கரையில் பறவைகள் பறக்கும் அழகை ரசித்தவர். ‘‘அவர் சொல்லுவார்.... பறவைகள் எவ்வளவு அழகாக பறக்கிறன.  தன் சிறகுகளை விரித்தபடியே...கடற்கரையில் தன் இலக்கில் வந்து அமர்கின்றன. அப்படியே மேல் எழும்புகின்றன.’’
எப்படி என்ற கேள்வி ஆரம்ப பள்ளி மாணவனாக இருக்கும் போதே மனசில் ஆழப்பதிந்து விட்டதாகவும், அவைகள் எப்படி பறக்கின்றன என்று தன் ஆசிரியரிடம்   கேள்வி கேட்டு அறிந்ததாகவும், தானும் அதுபோல் பறக்க ஆசை பட்டதாகவும் தன்னுடைய சிறுவயது கனவை நினைவு படுத்துகிறார்.
அந்த கனவு....எண்ணம்.....ஒரு குறிக்கோளாக, அவருள் லட்சியமாக வளர,
அந்த அறிவை தேடி, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இயற்யியலில் இளங்கலை(1954), சென்னை எம்.ஐ.டி.யில் வானூர்தி பொறியியல் உயர் படிப்பு(1957).
மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் சிந்தனை துளிகள்
*கனவு என்பது உன் தூக்கத்தில் காண்பதல்ல! உன்னை தூங்க விடாமல் செய்வதே (லட்சிய) கனவு!!


பறவையாய் பறக்க விரும்பியவர் , விமானியாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆகவே விமானப்படை விமானிக்கு நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்ட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எட்டு பேர் மட்டும் தேர்வு செய்யப்பட, இவருக்கு ஒன்பதாம் இடம் தான் கிடைத்த்து. வாய்ப்பு இழந்த நிலையில், தான் ஹரித்துவார் சென்றதாகவும், அங்கு மனதில் ஒரு தெளிவு பிறந்தது என்றும் அதன் பின் அவர், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு தறையில்(1960) பணியில் சேர்ந்ததாகவும கூறுகிறார்.


மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் சிந்தனை துளிகள்
*கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்! கஷ்டத்தை வென்று விடலாம்
மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் சிந்தனை துளிகள்
 *அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால்...அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்புகள் உள்ளன.

முதலில் இந்திய ராணுவ பயன்பாட்டிற்கு சிறிய ரக ஹெலிகாப்டர் வடிவமைத்தல், 1969 –ம் ஆண்டு இஸ்ரோ வின் எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள், தொடர்ந்து
1980-ல் எஸ்.எல்.வி.3 ராக்கெட் மூலம் ரோகினி-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவியதில் அப்துல்கலாம் அவர்களின் சிறப்பான பங்களிப்பு.




1970 முதல் 1990 வரை இஸ்ரோ விண்வெளி திட்டங்களின் எஸ்.எல்.வி. மற்றும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவி, உலக நாடுகளும் வல்லரசுகளும் நம் இந்தியாவை அண்ணாந்து பார்க்க செய்த பெருமைக்கு  அப்துல்கலாம் அவர்களின் மிக முக்கிய பங்களிப்பு.      

அவர் அடிக்கடி கூறும் ஒரு திருக்குறள்......
''இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.'' குறள் 623  
துன்பம் (தோல்வி) வரும்போது, மனம் கலங்காதவர், அந்த துன்பத்திற்கு (தோல்விக்கு)  துன்பம் (தோல்வி)  விளைவித்து அதை வென்றுவிடுவார்கள்.

மேலும் வல்லரசுகளுக்கு இணையாக இந்தியா ராணுவத்தில் அதி நவீன தொழில்நுட்பத்தில், உள்நாட்டு தயாரிப்பான, நீண்ட தொலைவு சென்று தாக்கும் உலகில் சிறந்த அக்னி, பிருத்வி, ஆகாஷ் போன்ற ஏவுகணைகளை தயாரிப்பதில் ஒரு முன்னோடி விஞ்ஞானி அப்துல்கலாம் அவர்களின் மிக முக்கிய பங்களிப்பு.

எல்லாவற்றிற்கும் சிகரமாய் 1999-ல் பொக்ரான் அணு-ஆயுத சோதனையை, அமெரிக்காவின் உளவு செயற்கைகோள் கண்ணில் படாமல் வெற்றிகரமாக செயல் படுத்தியதில் அப்துல்கலாம் அவர்களின் மிக முக்கிய பங்களிப்பு.

இது போன்ற பல்வேறு சாதனைகளை படைத்த, இந்தியாவின கடைகோடியில் ஒரு கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்து, சிறுவயதில் வறுமையில் பள்ளிகூடம் போவதற்கு முன் தினசரி பேப்பர்களை வினியோகம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வீட்டு செலவுக்கு கொடுத்து, ஏழ்மைநிலையில் படித்தவர் அப்துல்கலாம் அவர்கள்.

1981-ல் பத்ம பூஷண் விருது,
1990-ல் பத்ம விபூஷண் விருது,
1997-ல் இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா 
இந்த விருதுகள் அரசியல் காரணங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல.
அவரது அறிவுசார் சிந்தனை, செயல்கள், விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றிற்காக இந்திய அரசு அவரை கௌரவித்தது இது ஒவ்வொரு இந்திய குடிமகனும் பெருமை கொள்ளும் விசயம்.

எல்லாவற்றிற்கும் மணி மகுடம் சூட்டுவது போல் 2002-ல் அவர் அனைத்து அரசியல் கட்சிகளின் முழு ஆதரவோடு மிக பெரும்பான்மை வாக்கு பெற்று இந்திய குடியரசு தலைவரானார்(2002-2007)..  ”People President” ''மக்கள் ஜனாதிபதி'' அப்துல்கலாம் என்ற புகழ் மொழி அவரை தேடி வந்தது.


இந்த புகழ் மொழியை புகழ்மாலையை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவர்கள், இன்று தனது அஞ்சலி செய்தியில்,. ”People President” அப்துல் கலாம் என்று நினைவு கூறுகிறார். 

இந்த புகழ்மாலை, இந்தியா 2020-யில் ஒரு வல்லரசு ஆகும். கனவு காணுங்கள், உங்கள் கனவு செயல் வடிவம் பெறும் என்று உயிர் மூச்சு பிரியும் வரை நம் மாணவர்களை ஊக்கப்படுத்திக்கொண்டிருந்த அந்த உத்தமனுக்கு உலக வல்லரசு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவர்கள் புகழ்மாலை சூடுகிறார். 

பாரத ரத்னா, டாக்டர் A.P.J.அப்துல் கலாம் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அவர்கள் மீது சூட்டப்பட்ட இந்த புகழ்மாலை வாடிப்போகும் பூமாழை அல்ல. அவரோடு அணிகலன் ஆகிவிட்ட மணிமாலை! முத்துமாலை!! பவளமாலை!!!

மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் சிந்தனை துளிகள்
*பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால்..........
இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
  
  


மக்கள் ஜனாதிபதி, பாரத ரத்னா, டாக்டர் A.P.J.அப்துல் கலாம்
முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அவர்கள் 

கருத்துகள் இல்லை: